செவ்வாய், 1 ஜூன், 2021

 கண்ணீர் அஞ்சலி

சுவரொட்டி அடிக்க நேரமில்லை.,


வழிவிடவும்

பங்காளிகள் தேவையில்லை..,


உறவுக்கும் - நட்புக்கும்

செய்தியில்லை...,


ஒரு முழப்பூவும்

மேலே விழுவதில்லை ...,


சிறுதுளி கண்ணீரும்

உடல் நனைக்கப் போவதில்லை ...,


வாழ்ந்த வீட்டின் வாசலிலும்

வைத்தெடுக்கப் போவதில்லை...,


இயந்திரம் தோண்டிய பள்ளத்துள்

உறவுகள் முதல் மண் 

தள்ளப்போவதில்லை....


தகனமேடையில் சற்று முன்னெரிந்த

சாம்பலும் அகற்ற நேரமில்லை....,


பெருந்தொற்று மரணங்களுக்கு

பின்னொரு நாளில் அழுதுகொள்ளலாம்,

தனித்து-விலகி வீட்டுக்குள்

உயிர் பிழைத்துக் கிடப்போம்....


ஊரடங்கிற்கடங்கேனென்றால்

வாருங்கள் சற்று

மருத்துவமனை வாயில்களுக்கு,

பிணவறைக்குச் செல்லவும் நேரமின்றி

இடுகாடுகளை நோக்கிச் செல்லும்

நேற்றைய மனிதர்களைக் காணலாம்.


இடுகாடுகளுக்கு வாருங்கள்

எந்த வரிசையிலும் நிற்க விரும்பாதவர்கள்

எரிக்கப்படவும் - புதைக்கப்படவும்

வரிசையிலிருப்பதை காணலாம்.


மருந்தற்ற நோயோ

தவிர்க்க முடியாத நோயோ

இதுவல்ல.....


பெருந்தொற்றின் தொடரறுக்கத் தேவை

முதலில் தனிமை

பின்னர் தேவை

சித்தமும் -ஆயுர்வேதமும்-அலோபதியும்.


அதுவரை 

நாம்

தனித்திருப்போம் - விலகியிருப்போம்

மனித உணர்வுகளை நசுக்கித்தள்ளும்

பெருந்தொற்றின் தலையறுப்போம்.


              - அலெக்சாண்டர் பன்னீர்செல்வம்-

வெள்ளி, 21 மே, 2021

தனிமை 

தனித்திருக்கின்றேன் 
சில காலங்களாக தனித்திருக்கின்றேன் 
சாலையில் - கூட்டத்தில் 
கடைகளில் கூடயில் 
வங்கிகளின் வரிசையில் 
உறவுகளை காணயில் 
நண்பனுடன் கதைக்கையில் 
தனித்திருக்கின்றேன் ....

புன்னகையை புதைத்துவிட்டு 
கரங்களை ஒளித்துக் கொள்கின்றேன் 
தீண்டாமையின் துன்பத்தை 
முழுதாக உணர்கின்றேன்...
நொடிக்கொருமுறை 
அடிக்கொருமுறை 
கைப்பேசியை திறக்கிறேன் 
செய்தி பார்த்து துடிக்கிறேன் ....

அங்காடித் தெருக்களில் 
பெருங்கூட்டத்தின் மத்தியில் 
அமிலத்தின் அண்மையை தவிர்க்க 
ஓடி ஒளிகின்றேன் ...

ஏன் ?!....

பெருந்தொற்றாம் 
ஆட்கொல்லியாம்...
அருகில் நின்றாலே ஆட்கொள்ளுமாம் 
வேண்டாத கடவுளெல்லாம் 
எனக்கு வேண்டாத கடவுள்ளலாம் 
வரமருள வேண்டியும் 
வைத்தியசாலைக்கே வழி சொல்லின...

கருப்பங்காடுகள் எரிவதுபோல 
மனிதர்கள் எரிந்திருக்க ...
அடியாழத்தில் புதைத்திருக்க...
எள்ளி  நகைக்கின்றது "நான்"

தனித்திருக்கின்றேன் 
சில காலங்களாய் 
சொந்த வீட்டுக்குள்ளும் 
தனியறை தனிமையில்.

கைபேசிக்கடவுளின் கருணையால் 
காதருகே வரும் அனைவருக்கும் 
ஒன்றுபோலவே சொல்லுகிறேன் 
தனித்திருங்கள் 
இந்த தனிமையை ஒழிக்க...

காணாக்கடவுள் 
கண்கொண்டு காத்திருக்க வேண்டி 
கண்ணிறைந்த கடவுளாம் 
தூய்மை- சுகாதார பணிசெய்யும் 
கடவுள்களின் கரங்களில் 
நாளை விடியலை விட்டுவிட்டு 
கண்மூட விழைகின்றேன்...

ஆனால் 

கனவும்கூட 
தனிமையைதான் வெளிச்சமிட்டு மிரட்டுகிறது.

விடியட்டும் நாளை 
கூடி களித்திருக்க .....



செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

திங்கள், 14 ஜனவரி, 2013

ஊஞ்சல்

ஊஞ்சல் 


ஊஞ்சலை கடக்கும் போதெல்லாம் 
மனம் சிறுபிள்ளையாய் 
ஊஞ்சலாடிவிட்டுத்தான் வருகின்றது.!.

குழந்தைகளின் கலகல சிரிப்போசையும் 
ஊஞ்சலின் கிரீச்சிடும் ஓசையும் 
என்னதான் பேசியதோ .,
உற்சாகமாய் ஆடுகிறது ஊஞ்சல்!..

சிறியவர்       ஊஞ்சலில் பெரியவர் ஆடும்பொழுது 
கிளைகளில் ஆடும் குரங்குகள் 
என் நினைவிலாடுகின்றன.

குழந்தைகள் யாருமற்ற பொழுதில் 
காற்று சற்று ஆடி மகிழ்கின்றது..
ஊஞ்சலும் காற்றின் வழியே 
குழந்தைகளுக்கு தூதனுப்பி காத்திருகின்றது!.

சில ஆடாத ஊஞ்சல்கள் 
பறவை எச்சங்களால் காயப்பட்டு 
மலரும் நினைவுகளால் மெல்ல ஆடிக்கிடக்கின்றன!.

ஊஞ்சல் கற்றுத்தருகின்றது குழந்தைகளுக்கு 
வாழ்வில் சீராக வாழ கற்றுக்கொடுக்கின்றது.

அருகருகே இரு ஊஞ்சல்கள் 
இருந்துவிட்டால் போதும் 
யாருமற்ற பொழுதில் குழந்தைகளின் 
ஞாபக ங்களை  பேசி களிக்கின்றன!..

யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் ஊஞ்சல்களை,
குழந்தைகளுக்கு சொல்லவேண்டிய கதைகளை 
ஒருமுறை மனதுக்குள்  சொல்லிப்பார்க்கட்டும்!.





 

சனி, 21 ஜூலை, 2012

பிரிவு

பிரிவு


தேங்காய் உடைத்து
எல்லோரும் கடை மூடும்
ஒரு வெள்ளிக் கிழமை
என் இதயம் உடைத்து
நம் காதலை மூடினாய் !

குருதியால் எழுதிய
என் கடிதம் கண்டு நீ
கதறி அழுது தோள் சாய்ந்து
" வேண்டாண்டா ,
இப்படி செய்யாதே!"
என்றென்னை அணைத்துக்கொண்டாய் !

ஆற்றோர மாலை சந்திப்பில் ,
விளைந்த நெற் கதிராய்
மடியில் சரித்து என் மீது
கவிழ்ந்து கதைப்பாய்
இதயங்களின் பாச மொழி
இதழ்களில் படிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்!

குளிர் கால சூரியன் போல 
தாமதமாய் வந்து 
சீக்கிரமாய் போய் விடுவாய் ,
கழிந்த  நொடிகளிலும்
சேர்ந்து  களித்த நொடிகளிலும் 
வாழ்ந்து...... வாழ்ந்து.,
சிரித்து ....... சிரித்து .,
நினைத்து ...... நினைத்து.,
உருகி ....... உருகி
கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பேன் .,
அடுத்த சந்திப்பில்
படித்து பாராட்டி தலைகோதி
" என் மீது
இவ்வளவு காதல?!".,
என்று ஆச்சரியம் காட்டி
என் தோள்  புதைவாய்!

திரைப்பட அரங்கின்
மெல்லிய இருட்டில்
விரல்கள்  சேர்த்து இறுக்கி
பிரியோம் என்
உறுதி மொழி எடுத்தோம்!

உன் அம்மாவுடன் வரும்பொழுதும் .,
அப்பாவுடன் வரும்பொழுதும் .,
தம்பியுடன் வரும்பொழுதும்
யாரும் உணரா சாடைகள் மூலம்
உறவினை அறிமுகம் செய்து
மின்னல் வெட்டாய்
குறும்பாய் சிரித்துப் போவாய்!

பிரியோம் ..... பிரியோம்  என 
நான் இருமர்ந்திருந்த பொழுதினில்தான் 
நீ............... 

நீச்சல்

நீச்சல்


ஒரு
பூவின் இதழ்களை....
இதழ்களின் வேர்வையை 
பனி துளிகளை 
நாசி படர  நுகர்ந்து .....

தாமரைத் தண்டினை
வளைத்தெடுத்து .,
மலரா மொட்டுகளில் நீந்தி ..,
ஆழக்குளத்தரை  தொட்டு .,
மகிழ்ந்து களைத்து
கரையினில் அயர்ந்தேன் .,
பரிவும் உயிரும் கசிய
அன்பாய் அலைகளால்
என்னைத் தடவ
அரைக்கண்கள் திறந்து பார்த்தேன் .,

தளர்ந்த உன் கண்கள்
என் உயிரினை கட்டி
ஆதரவாய் படர்ந்திருந்தது!




வெள்ளி, 20 ஜூலை, 2012

காதல்

காதல்

காதலுக்கு முகவரி கொடுத்தவர்கள்
என்று சிலரை சொன்னார்கள் .,

ரோமியோ - ஜூலியட்
அம்பிகாபதி - அமராவதி .,
லைலா - மஜ்னு .,
அனார்கலி - சலீம் .,
ஷாஜஹான் - மும்தாஜ்
என உதாரண ஜோடிகள் நீள.,

மெள்ள  காதலை  கேட்டேன் .,
"இவர்களின் முகவரியிலா
வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் ?!"

நகைத்தது காதல் .,

"உலக தோற்றத்தின்
உயிர் நான்.,
ஒவொரு உயிரின்
சுவாசம் நான்.,
மனிதனில் உருவாகவில்லை நான்
அணுக்களில் தொடங்கி கருவானேன் !
இவர்கள் எனக்கு முகவரியல்ல
என் முகவரியில் அவர்கள் வாழ்கிறார்கள்."

"எப்படி?! " என்றேன்.

"காதல் இல்லையேல் 
இந்த காவியங்கள் இல்லையே !." 

வியாழன், 19 ஜூலை, 2012

அன்பு

அன்பு

அன்பு  செய்
அன்பு தீர்ந்து போகும் வரையல்ல !
நீ தீர்ந்து போகும் வரை !

கோபம் கொள்
நீ தீர்ந்து போகும் வரையல்ல
தீது தீர்ந்து போகும் வரை!

காதல் செய் 
காதல் முடியும் வரையல்ல 
உலகம் முடியும் வரை !

நன்மை  செய் 
கொஞ்சம் உன் பொருட்டும் 
பெய்யட்டும் மழை ! 

கிறுக்கல்

கிறுக்கல்


மழலையின் கிறுக்கலுக்கும்
உயர் அதிகாரியின் கையொப்பத்திற்கும்
வேறு பாடுகள் பல உண்டு !

அது அழகாயிருந்தது ,
இது அவசியமாய் இருந்தது !

அது உயிரை  நிறைத்தது ,
இது வயிறை  நிறைத்தது !

அது வெற்று காகிதம் முழுதும் நிறைக்க,
இது ஒரு மூலையில் அடங்கும் !

அது கோப்புகள் பிரிதறியாது .,
இது கோப்புகள் பார்த்தெழுதும் !

சொல்லவெல்லாம்  எத்தனையோ  இருந்தாலும் 
தன் மழலையின் கிறுக்கலுக்கு
உயர் அதிகாரியும்  அடிமைதான் !.

வியாழன், 12 ஏப்ரல், 2012

இதயப் பூட்டு

இதயப் பூட்டு



உன்னை விட்டு விலகின
என் காதலுக்கு
இறுதி அஞ்சலி செலுத்தின கையோடு
பேசுகிறேன் உன்னோடு!


என் மீது
உன் பார்வைகள் படர்ந்தும்
படாத உன் இதயம்   

நீ
அருகினில் வந்தும்
தொலைவாயிருந்த உன் காதல்.



நீ உயரத்தில் இருந்தாய்
நான் பள்ளத்திலிருந்தேன்,

பின்னாளில்தான் உணர்ந்தேன்.,

நீதான் பள்ளத்தாக்கிலிருந்தாய்,
நான் சிகரத்தில் வீற்றிருந்தேன்
நான் என்னவோ சிதற தயாராகத்தான் இருந்தேன்.,

ஆனால்,

பூகம்பம் உன்னில்தான்
உருவாக வேண்டும்.


இதனை என்றேனும்
படிக்க நேர்ந்தாலும் - நீ
ஏதோ ஒரு எழுத்தென
இகழ்ந்துவிடுவாய் எனத் தெரியும்.


என் காதல்
சரியான சாவிதான்,
ஆனால்,
உன் இதயப் பூட்டோ
துரு பிடித்து உதிர்ந்துவிட்டது!






பிரிவின் சந்தோசம்

பிரிவின் சந்தோசம்


என் இருதயத்தில் செருகிய
கத்தியில் உன் பெயர் இருந்தது
நம்புவதற்கு இயலாமல்

என் குருதி வழிந்தோடியது

குருதியில் நீ இருந்தாய்

என் கண்கள் இருண்டபோது
தூரத்தில் உன் உருவம் தெரிந்தது

உடல் தளர்ந்து வீழ்ந்தபோது
உன் பெயரெழுதிய கத்தி
என்னை தாங்கிக்கொண்டு
முதுகின் வழியாய் வெளி வந்தது

என் நினைவு மறையும் பொழுது
என் செவியில் விழுந்தது
உன் சதோஷ குரலோசை
சிரித்துக் கொண்டேன்
என் காதல் உன்னை இப்பொழுதாவது
சந்தோஷப் படுத்தியதே!

சனி, 7 ஏப்ரல், 2012

காலம்

காலம் ....

காலத்திற்கு தக்க
கருத்துக்களை மாற்றிகொள்பவன்
தந்திரசாலி
 காலங்கள் முழூமைக்கும் ஏற்ற
ஒரு கருத்தினை  சொல்பவன்
புத்திசாலி!

ஞாயிறு, 25 மார்ச், 2012

தாமரை இலை தண்ணீர்

தாமரை இலை தண்ணீர்


ஏழாம் வகுப்பில் ஓர் நாள்
அறிவியல் தேர்வு நடந்தது
அறிவியல் வாத்தியார் ரொம்ப
கோவக்கார வாத்தியார்.,

அவர் வச்ச பரிச்சையில
சின்னதா ஒரு கேள்வி

''தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை ஏன்?"

பக்கத்திலிருந்த பையன்
அழகா  எழுதியிருந்தான்  இப்படி

"தாமரை இலை மீது லட்சுமி உட்காருவதால்
தண்ணீர் ஒட்டுவதில்லை"

அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது
தாமரை இலையில மட்டும் இல்லை
கண்ணுல கூட தண்ணீர் நிக்காதுன்னு!

பிரிவு

பிரிவு


நல்லதுதான்
இது நல்லதுதான்

என் இருப்பை உனக்கு சொல்லும்
என் அன்பை உனக்கு சொல்லும்
என் பொறுமையை உனக்கு சொல்லும்
என் தேவையை உனக்கு சொல்லும்
என் அணைப்பை உனக்கு சொல்லும்
என் காதலை உனக்கு சொல்லும்

நல்லதுதான்
இது நல்லதுதான்

இந்த பிரிவினை மட்டும்
நீ தேர்ந்தெடுக்காமல் போயிருந்தால்
நான் யாரென்பதை நீ
உணராமல் போயிருப்பாய்

ஒரு வேளை நீ
உணராதது போல் வேடமிடலாம்

என்றாலும் உன் மனது உனக்கு சொல்லும்

நான் யாரென்பதை !....



வெள்ளி, 2 மார்ச், 2012

மூக்கொழுவி

மூக்கொழுவி



மூக்கொழுவி

 
சின்ன வயசில
தென்னை மட்ட வண்டில
தெரு புழுதில
முடியெல்லாம் மண்ணாகி
ஒடம்பெல்லாம் அழுக்காகி
அருணாகொடி போட்டும் நிக்காத கால் சட்டை
மாட்டிகிட்டு வளையவந்த 
காலங்கள் நினைப்பிருக்கு

எல்லாரும் சேந்து  ஒண்ணா 
விளையாடும் போது    நாங்க
வேண்டாமுன்னு விரட்டிடுவோம்
மூகொழுவி கவிதாவ...

காலம் பல மாறி
காதல் பல தோத்துபுட்டு.,
தாடி வளர்த்து - தாடி எடுத்து
புது காதல் பல தேடி தேடி
கன்னாபின்னான்னு  களைசிருக்க

தேவத ஒருத்தி தென்றலா
தாண்டிப் போனா....

யாருடா அவன்னு  
காதல சொல்லப் போனா

நெத்தி தழும்பு அவ யாருன்னு சொல்லிடுச்சி..

பருவத்துல பன்னியும் அழகும்பாங்க

இல்லங்க

அவ பருவத்துல
பருவமே அழகா  இருந்தது

எப்படி போய் நான் சொல்ல

உன்ன நான் காதலிக்கிறேன்
மூக்கொழு... இல்லை இல்லை.... கவிதான்னு .!





வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சுதேசி

சுதேசி



டாலர் நம்மை விழுங்கிவிட்டது
பரபரப்பாய் அலைந்து
பணத்தைத் தேடி நம்மை
தொலைத்து விட்டோம்!

சுதேசி பிரச்சாரகர்களின் 
விதேசி மகிழுந்து ஊர்வலம்
தைக்கப்பட்ட வாய்களோடு
பாமாலை பாடுகிறது

சாதியொழிப்பு போராட்டத்தில்
திராவிடம் அழிந்து ஆரியம் தளிர்க்க
திராவிட தலைவர்களின்
மஞ்சள் துண்டு ஊர்வலம்!

புரட்சிக்காரர்கள்
தீவிரவாதிகளாக காட்டில்.,
கொள்ளைக்காரர்கள்
அரசியல்வாதிகளாக நாட்டில்.!

மன்னராட்சி அழிந்து
மக்களாட்சி மலர்ந்த தேசம் .,
நாட்டை ஆள இங்கு
புதிய புதிய மன்னர்கள்!

அதிகாரங்கள் நொறுக்கும் விரல்கள்
ஐந்து வருடங்கள் துருபிடித்து கிடக்க.,
தொலைத்த நம்மை அடிமையாய் கண்டு
மீட்டெடுத்து மீண்டும் தொலைத்துவிட்டோம்!.


தொட்டில் குழந்தையின் தாலாட்டு !...

தூளியிலே போட்டு என்னை
தாலாட்ட வேண்டாம் அம்மா!

மடியினில் ஏந்தி எனக்கு
பாலூட்ட வேண்டாம் அம்மா!

போகையிலும் - வருகையிலும் என்னை
சுமந்து திரிய வேண்டாம்  அம்மா!

காலிலே கிடத்தி என்னை சுடுநீரில் 
குளிப்பாட்ட வேண்டாம் அம்மா!

பொட்டிட்டு  பூவிட்டு புத்தாடை எனக்கு
அணிவிக்க வேண்டாம் அம்மா!

உன் பார்வையினோரம் என்னை ஒரு
கிழிந்த பாயிலேனும் கிடத்தி
பார்த்திருக்கக் கூடாதா அம்மா?!

பெண் என்று என்னை அநாதையாக்கிவிட்டு 
வீதியிலே போட்டு விட்டாய் .,

யாரேனும் கண்டெடுக்கும் முன்பு என்னை 
ஒரு பூனை கடித்து தின்னலாம் .,
தெரு நாய்கள் குதறலாம்.,
கொடும் வெயிலும் சுடலாம்., 
கடும் மழையிலும் நனையலாம்.,
உன் மடி தரும் பாதுகாப்பை
இந்த தெரு தருமா அம்மா?!

பயங்கொள்ளும் கனவு கண்டு 
வீறிட்டு நானழுதால் 
யாரென்னை அள்ளி எடுத்தணைத்து 
ஆற்றித் தேற்றுவார் அம்மா?!

பசி கொண்டு நானழுக 
எந்த பால்மடி ஊறி எந்தன் 
பசி தீர்த்து மகிழுமம்மா?!

வளரும் பொழுதினிலே அநாதை என்றென்னை 
யாரேனும் இடித்துரைக்க நேரலாம்,

முறை தவறி பிறந்தவள் என என்னை
பழி கூறி தூற்றலாம் !

என்றோ நீ செய்த கனநேர தவறுக்கு
என்னாயுள் முழுவதும் என்னை
தணலிலே விடுவது ஞாயமா அம்மா?!
குறையுள்ள தாய் ஒருத்தியும்  இல்லையாம்,

உண்மையை சொல் அம்மா.,
நீ தாயா? - பேயா?!
என் வாழ்க்கை பாதையெங்கும்
பெயர் தெரியா அம்மா ..,
முகம் தெரியா அம்மா....
உன் பெயர் தாங்கிய முட்க்கள்தானே!.

நீ பிறவா  நொடிகள் இருந்திருதால்
எத்துனை நலமாய் எனக்கு
இருந்திருக்கும் அம்மா !








புதுப்பி

புதுப்பி 


அடிக்கடி
புரட்டிப் பார்த்து.,
நினைத்துப் பார்த்து.,
படித்துப் பார்த்து.,
என்னதான் புதுப்பித்தாலும் 
இறந்தவனின் நினைவுகளாக
நம் காதல் ! 

பிறந்த நாள்

பிறந்த நாள்


இன்றைய  நாளில்
அன்றொரு நாளில் பிறந்தேனாம்,

நன்று,

என்ன செய்தேன் இந்த உலகிற்கு?!

இத்தனை வருடங்களும்
புகை போல கரைந்ததை
நாட்கள் வீணில் மறைந்ததை
ஊர் கூட்டி கொண்டாடுகிறோம் - கேவலமாய்

இனியாவது - இந்த வருடம்
மரிக்கும் முன்னாவது
செய்வோமா ஏதேனும் நல்லது - உலகுக்கு ?!.

ஒவ்வொரு பிறந்த நாளும்
இறந்தநாளை நினைவூட்டுகின்றது

உறுதி எடுத்தேன் நான் இன்று
நன்மை செய்ய தவறினாலும்
செய்யேன் யாருக்கும் நான் - தீமை!